ஏ.ஆர்.டிஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு pt desk
குற்றம்

சென்னை: ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு - ரூ 1.5 கோடி வரை மோசடி செய்ததாக பெண் தரகர் கைது

ஏ.ஆர்.டிஜூவல்லர்ஸ் மோசடி வழக்கில் 1.5 கோடி வரை மோசடி செய்த பெண் தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

தமிழகத்தில் ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் போன்ற நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பொதுமக்களிடம் முதலீடுகளாக பெற்று மோசடி செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை அடுத்த முகப்பேரில் தங்கநகை சேமிப்பு, தங்க நகைக்கடன் ஆகிய திட்டத்தின் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பலரை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.ஆர்.டிஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு

குறிப்பாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட முகப்பேர் ஏஆர்டி ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகிய இருவரையும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதே போல கமிஷனுக்கு ஆசைப்பட்டு பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி நகை திட்டத்தில் சேர்த்துவிட்ட ஏஜெண்டுகள் பிரியா, ஜவகர், தேவராஜ், ஆசிக் அலாவுதீன், உள்ளிட்ட 8 ஏஜெண்டுகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுவரை இந்த வழக்கில் மொத்தம் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லீமாரோஸ் என்ற பெண் ஏஜெண்டையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட லீமாரோஸ் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இவர் இதுபோல பல திட்டங்களை மார்க்கெட்டிங் செய்து மோசடி செய்ததில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்துள்ளது.

ஏஆர்டி நிறுவனத்தின் உரிமையாளரான ராபினின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த லீமா ரோஸ், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ஆல்பின், ராபின் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை, பினாமியாக லீமா ரோஸ் பெயரில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்களா என்ற கோணத்திலும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.ஆர்.டிஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு

இதுவரை ஏஆர்டி ஜூவலல்லர்ஸ் மோசடி வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை மொத்தம் 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏஆர்டி நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் மற்றும் ஏஜெண்டுகளின் சொத்துக்கள் என எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதர குற்றப்பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த மோசடி வழக்கில் 56 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதுவரை முடக்கப்பட்ட 8 கோடி ரூபாய் சொத்துக்களை நீதிமன்ற வழிகாட்டுதல் படி, சம்பந்தப்பட்டவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.