திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (35) மற்றும் அவரது மகன்கள் தர்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில் முத்துமாரி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். முத்துமாரி, தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனியாக மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் முத்துமாரி அந்த நபருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை முத்துமாரியின் வீடு, நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு வெளியே நின்று அழைத்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து முத்துமாரி பதில் குரல் எழுப்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது ரத்த வெள்ளத்தில் முத்துமாரி மற்றும் அவரது மகன்கள் 2 பேர் உள்பட 3 பேரும் பிணமாகக் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த ரத்தம் படிந்த பாய் மற்றும் இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு வந்து, கொலை நடந்த இடத்தை அவர் பார்வையிட்டு சென்றார். இந்நிலையில் முத்துமாரி உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த அந்த நபர், கொலை சம்பவம் நடந்த நாளில் இருந்து அங்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், கொலையாளியை கண்டுபிடிக்க மாநகர கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்ற கார்த்தி (50) என்பது தெரியவந்தது. இதனால் போலீசார், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முதற்கட்டமாக கோபால் வேலை செய்த ஒரு பல்பொருள் அங்காடியில், அவரது உருவம் பதிவான புகைப்படத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இன்று காலை காங்கேயம் படியூர் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றினர். அப்போது பிணமாக கிடந்தது முத்துமாரி உடன் தொடர்பில் இருந்த கோபால் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காங்கேயம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் தேடுவதை அறிந்த கோபால், தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.