woman cheating with Hiv PT
குற்றம்

பலரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி! திருமணம் செய்தவர்களுக்கும் உறுதியானதால் அதிர்ச்சி!

பல ஆண்களை திருமணம் செய்து கொண்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்நியோடி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சி.

சண்முகப் பிரியா . செ

உத்தரப் பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆண்கள், திருமணம் என்ற பெயரில் ஏமாற்றப்படுவதாகப் பல புகார்கள் வரவே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விசாரணையில் இப்படி தொடர் மோசடியில் ஈடுபட்டு பல ஆண்களை ஏமாற்றிய பெண் ஒருவரை உத்தரபிரதேச போலீசார் கடந்த மே 6ம் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இதுவரை 5 ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாது அவருடன் அவரது கூட்டாளிகள் இணைந்து திருமணத்திற்கு வரன் தேடும் இளைஞர்களைக் குறிவைத்து இந்தப் பெண்ணை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி தாங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல நடித்து ஏமாற்றி திருமணம் செய்து, திருமணம் முடிந்த கையோடு விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் உ.பி., மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் செயல்பட்டு வந்துள்ளனர். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின்படி அவரது கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து புஜாபர்நகர் சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்த பெண்ணை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரால் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட ஆண்களைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அவர் உடல் ரீதியாக தொடர்பு கொண்ட மூன்று ஆண்களுக்கு இப்போது எச்.ஐ.வி தொற்று இருப்பதாக உத்தரகாண்ட் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. உதம் சிங் நகரின் சுகாதாரத் துறை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆண்களுக்கு சோதனைகளை நடத்தி தொற்று உறுதியானதும் அவர்களுக்கு ART மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட ஆண்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தான் திருமணம் செய்தாகக் கூறிய ஐந்து பேரில் மூன்று பேர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர் மேலும் பலரை திருமணம் செய்து ஏமாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் உ.பி.யில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.