குற்றம்

”வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சித்தோம்” - கர்நாடக வீடியோ சர்ச்சையில் சிக்கிய பெண்

”வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சித்தோம்” - கர்நாடக வீடியோ சர்ச்சையில் சிக்கிய பெண்

Sinekadhara

கர்நாடகா மாநில அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோலி தொடர்பான பாலியல் அத்துமீறல் புகார் விவகாரத்தில், முதன்முறையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் பாஜக அமைச்சரவையின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோலி. 60 வயதான இவர் ஒரு இளம்பெண்ணுக்கு அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படும் அந்தப் பெண்ணுக்கு அமைச்சர் தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஜார்கிஹோலி பதவி விலகவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தின.

முதலில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஜார்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டு எதிரிகளின் சதி என்று ஜார்கிஹோலி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பாஜக தலைவரின் புகார் பதிவான ஒரு மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி, வீடியோ கிளிப் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

கர்நாடகா உள்துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மாயியை குறிப்பிட்டு அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் பேசியிருந்தார், ‘’அந்த வீடியோவை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வீடியோ வெளியானபிறகு, எனது குடும்பத்தின் மரியாதை நிரந்தரமாக தொலைந்துவிட்டது. இதுகுறித்து நிறையப்பேர் என்னையும் எனது குடும்பத்தையும் கேள்விகேட்கிறார்கள். அனைவரும் எங்களை தரக்குறைவாக பார்க்கிறார்கள். இந்த வீடியோ பொதுவெளிக்கு வந்தபிறகு, பலமுறை என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள நான் முயற்சிசெய்தேன். எனது பெற்றோரும் இரண்டுமுறை தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சி செய்தனர்.

எங்களுடைய குடும்பத்தை பாதுகாக்க யாரும் இல்லை. எங்களுக்கு அரசியல் பக்கபலமும் இல்லை. ரமேஷ் ஜார்கஹோலி வேலை வாங்கித்தருவதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். தற்போது அவர் தரப்பிலிருந்து இந்த வீடியோ வெளிவந்துள்ளது. வீடியோ பதிவு செய்யப்பட்டதுகூட எனக்கு தெரியாது. எனக்கு பாதுகாப்பு இல்லை. நான் உங்களிடம்(பொம்மாயி) கேட்பது பாதுகாப்பு மட்டும்தான்’’ என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

பாலியல் அத்துமீறல் வீடியோவை பதிவுசெய்தது மற்றும் வெளியிட்டது யார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அந்த பெண் வீடியோ வெளியிட்ட உடனே பொம்மாயி வீட்டிற்குச் சென்ற ஜார்கிஹோலி, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தனது அரசியல் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ’’இந்த வழக்கில் நான் குற்றமற்றவர் என்பது விரைவில் தெரியவரும். முதலில் அந்த பெண் வெளிவந்து வழக்குத் தொடரட்டும். நான் அதை எதிர்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.