குற்றம்

பூனைகளை பட்டினிப் போட்ட பெண் கைது!

பூனைகளை பட்டினிப் போட்ட பெண் கைது!

webteam

பூனைகள் மற்றும் நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டி, பட்டினிப்போட்ட பெண் கைது செய்யப்பட்டார். 

புனேவில் உள்ள முகமதுவாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்குள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த 1-ம் தேதி பூனைகள் மற்றும் நாய்க்குட்டியின் சத்தம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது. அந்த வீடு ஜெனிபர் என்பவருக்குச் சொந்தமானது. வீடு பூட்டியிருந்தது. ஜெனிபரை பற்றிய தகவல் இல்லாததால் குடியிருப்பு வாசிகள் விலங்குகள் நல வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் உதவியுடன் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஓர் அறையில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மூன்று பூனைகளும் ஒரு நாய்க்குட்டியும் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை மீட்ட போலீசார், அங்கு ஓர் ஆமை இருந்ததை கண்டனர். பின்னர் ஜெனிபரை வரவழைத்து விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. 

கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு விட்டுக்குச் சென்றுவிட்டார் ஜெனிபர். இந்த செல்லப் பிராணிகளை கட்டிப்போட்டுவிட்டு சென்றதாக போலீசிடம் சொன்னார். மூன்று நாட்களாக பசியால் அந்த செல்லப் பிராணிகள் கத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெனிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட செல்லப் பிராணிகள், விலங்குகள் நல அமைப்பிடமும், ஆமை, பாம்பு பண்ணையிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.