குற்றம்

வரதட்சணை கேட்டு பெண் அடித்துக்கொலை?: கணவன் மாமியார் மீது குற்றச்சாட்டு

வரதட்சணை கேட்டு பெண் அடித்துக்கொலை?: கணவன் மாமியார் மீது குற்றச்சாட்டு

Sinekadhara


திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வாதண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பானுசந்தர் (35). இவர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் மகள் ராதாவுக்கும்(29) கடந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு பானுசந்தர், அவரது தாயார் சந்திரா மற்றும் அவரது தங்கை சுஜிதா பானு ஆகிய 3 பேரும் சேர்ந்துகொண்டு, ராதாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டுத் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ராதா தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசியபோது கணவர் வீட்டார் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் ராதாவின் பெற்றோருக்கு போன் செய்த பானுசந்தர் ராதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் நன்னிலம் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 நவநீதகிருஷ்ணன் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் நேரில் வந்து பார்த்தபோது ராதாவின் முகம், காது மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் மகளுக்கு 15 லட்ச ரூபாய் அளவுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிய நிலையிலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பானுசந்தரும், அவரது தாயார் சந்திராவும் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், நேற்றைய தினம் தகராறு செய்து தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொலைசெய்து விட்டதாகவும் உயிரிழந்த ராதாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருவாரூர் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது. உயிரிழந்த ராதாவின் உடல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.