குற்றம்

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்- தனியார் கருத்தரிப்பு மையம் மீது நடவடிக்கை?

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்- தனியார் கருத்தரிப்பு மையம் மீது நடவடிக்கை?

webteam

குழந்தைக்காக சிகிச்சை பெறவந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தார். மருத்துவமனை மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

திருவள்ளுவர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (38). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அம்பத்தூரைச் சேர்ந்த திவ்யா (31) என்பவருடன் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத காரணத்தினால் இவர்கள் இருவரும் பெரம்பூர் பகுதியில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைக்காக அவ்வப்போது வந்து சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். இந்நிலையில் திவ்யாவிற்கு நீர்க்கட்டி உள்ளதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்காக கடந்த 28ஆம் தேதி காலை 11 மணிக்கு பெரம்பூரில் உள்ள ஏஆர்சி மருத்துவமனையில் திவ்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சில மணிநேரங்களில் அவர் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

பெரம்பூரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் இருந்த மருத்துவர்கள் தவறாக அறுவைசிகிச்சை செய்துவிட்டதாகவும், அதனால் தான் திவ்யா உயிரிழந்ததாகவும் கூறி  திவ்யாவின் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பெரம்பூரில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தை முற்றுகையிட்டு மருத்துவமனை நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திரு.வி.க. நகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து திவ்யாவின் உறவினர்கள் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.