குற்றம்

ஈரோடு: கொரோனா பரிசோதனை எனக்கூறி மர்மநபர் வழங்கிய மருந்தை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

ஈரோடு: கொரோனா பரிசோதனை எனக்கூறி மர்மநபர் வழங்கிய மருந்தை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

Sinekadhara

சென்னிமலையில் கொரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி மர்மநபர் வழங்கிய மருந்தை சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள முருகன்தொழுவு சேனாங்காடு தோட்டம் பகுதியில் கருப்பண்ணகவுண்டர், தனது மனைவி மல்லிகா, மகள் தீபா ஆகியோருடன் வசித்து வருகிறார். விவசாயியான இவரது வீட்டிற்கு இன்று காலை வந்த மர்ம நபர் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்த கருப்பண்ணகவுண்டர், மல்லிகா, தீபா மற்றும் வீட்டு வேளையாள் குப்பாள் ஆகிய நால்வருக்கும் மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்ன பின்னர் கொரோனா பரிசோதனை செய்வதுபோல நடித்து, பிறகு நால்வருக்கும் கொரோனா இல்லை எனக் கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட நால்வருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. இதுகுறித்து மகள் தீபா தனது கணவருக்கு தகவல் தெரிவிக்க நால்வரையும் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதில் மல்லிகா மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர்கள் மூவரையும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் முன்விரோதமாக நடைபெற்றதா அல்லது வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் சென்னிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.