குற்றம்

கணவரை கத்தியால் குத்திய பெண்: திருமணத்தை மீறிய உறவால் பறிபோன உயிர்

கணவரை கத்தியால் குத்திய பெண்: திருமணத்தை மீறிய உறவால் பறிபோன உயிர்

Sinekadhara

டெல்லியில் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவனைக் குத்தி கொலை செய்த கானா நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

கானா நாட்டைச் சேர்ந்த அபிகாயில் என்ற பெண், நைஜீரியாவைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவரை கடந்த 2019, செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டு டெல்லி புறநகர் பகுதியில் வசித்துவந்திருக்கிறார். அபிகாயில் வீட்டிலேயே சொந்தமாக தின்பண்டம் செய்து விற்பனை செய்துவருகிறார். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இருவரும் பிரிந்து தனித்தனியாக இருந்திருக்கின்றனர். மேலும் தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்த அபிகாயில், இதுகுறித்து அவரிடம் சண்டையிட்டிருக்கிறார்.

இந்நிலையில், திங்கட்கிழமை இம்மானுவேல் அபிகாயிலை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் கத்தியால் கணவரைக் குத்தியிருக்கிறார். பிறகு அவரே இம்மானுவேலை டிடியு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். விஷயம் தெரியவருவதற்கு முன்பே அங்கிருந்து தப்பித்த அபிகாயில் தனது செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

சிகிச்சை பலனின்றி இம்மானுவேல் உயிரிழந்ததால், அவரது மனைவியைத் தேடியிருக்கின்றனர். அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறது. டிசிபி சுதான்ஷூ தாமா தலைமையிலான குழு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறது. இம்மானுவேலை சோதித்துப் பார்த்ததில் அவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. சில மணிநேரங்கள் கழித்து தனது செல்போனை ஆன் செய்த அபிகாயிலை, லொகேஷனை வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

அவரிடம் விசாரித்ததில், மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாததால், தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். கொலைசெய்த குற்றத்திற்காக அவர்மீது நிஹல் விஹார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.