குற்றம்

கொடுமை செய்த கணவர்.. கொரோனா எனக்கூறி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தப்பித்த மனைவி..!

கொடுமை செய்த கணவர்.. கொரோனா எனக்கூறி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தப்பித்த மனைவி..!

Sinekadhara

கொடுமை செய்த கணவனிடமிருந்து தப்பிக்க கொரோனா எனக் கூறி ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு ஒரு பெண் தப்பிச் சென்றிருக்கிறார்


செப்டம்பர் 4ஆம் தேதி, பெங்களூரு மஹானாகரா பல்லிகே பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் எனக்கூறி, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு வந்த இரண்டு பேர் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். அந்தப் பெண் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். 

மேலும் பாதிப்பு இரண்டாம் நிலைக்குச் சென்றுவிட்டதால் வீட்டில் தனிமைப்படுத்த முடியாது, மருத்துவமனையில்தான் சேர்க்கவேண்டும் என்றும் கூறிச் சென்றிருக்கின்றனர். அவர் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று குடும்பத்தாருக்குத் தெரிவித்திருக்கின்றனர். மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு விசாரித்தபோது, அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கின்றனர். எனவே அந்த பெண்ணின் கணவனின் சகோதரர், அவரைக் காணவில்லை என போம்மனஹல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

மேலும் செய்தித்தாளிலும் காணவில்லை என விளம்பரம் செய்திருக்கின்றனர். தனது புகைப்படத்தை செய்தித்தாளில் பார்த்த அந்த பெண்
செப்டம்பர் 8ஆம் தேதி, பொம்மனஹல்லி ஆய்வாளர் ரவிசங்கரை தொடர்புகொண்டிருக்கிறார். தான் காணாமல் போகவில்லை எனவும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்காக நடத்திய நாடகம் எனவும் கூறியிருக்கிறார். தனது கணவும், அவரது சகோதரரும் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுமை செய்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், மீண்டும் திரும்பிவர விருப்பம் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

தனது தோழி கொடுத்த யோசனையின்படி, தான்  சேர்த்து வைத்திருந்த பணத்தில் ஒரு தனியார் ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்து, பீஹாரைச் சேர்ந்த இரண்டு நபர்களையும் இந்த நாடகத்திற்குப் பயன்படுத்தி இருக்கிறார். தான் திட்டமிட்டபடி, பெங்களூருவிலிருந்து தப்பித்து புதுடெல்லிக்குச் சென்றிருக்கிறார். இந்த தகவலை ஆய்வாளர் ரவிசங்கர் அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்திருக்கிறார்.

இதனால் அந்த பெண்ணின் சகோதரர் அவரை சந்திருக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் கணவனின் சகோதரர், கடைசியாக புதுடெல்லியில் அவர் பேசிய லொகேஷனில் அவரைச் சென்று தேடியதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த பெண் புகார் கொடுக்காததால் அவர் கணவர்மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காணாமல்போனதாக அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.