குற்றம்

போலியான நிறுவனங்களின் பெயரில் ரூ.12.5 கோடி பண மோசடி - ரவுடி மனைவி கைது

போலியான நிறுவனங்களின் பெயரில் ரூ.12.5 கோடி பண மோசடி - ரவுடி மனைவி கைது

Sinekadhara
போலியான நிறுவனங்களின் பெயரில் பணத்தை முதலீடு செய்யவைத்து ரூ.12.5 கோடி, 36 சவரன் தங்க நகைகளை மோசடிசெய்த ரவுடி மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், ’’நான் சவூதி அரேபியாவில் சொந்தமாக டிரேடிங் பிசினஸ் செய்துவருகிறேன். கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது, தெரிந்த நண்பர் மூலமாக போரூரைச் சேர்ந்த சுனிதா என்பவர் அறிமுகமானார். என்னிடம் பணம் இருக்கும் விவரத்தையும், கொரோனா காரணமாக ஏற்பட்ட முழு ஊரடங்கால் நான் மறுபடியும் வெளிநாடு செல்ல இயலாத சூழ்நிலையையும் சுனிதா தெரிந்துகொண்டார். அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் இணைந்து, என்னை அணுகி சென்னை, சின்னமலை, காசாகிராண்ட் அபார்ட்மெண்டில் Sun Boutique Pvt Ltd and Koyambedu Finance Association Pvt L.td ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி அதன்மூலமாக பல்வேறு டிரேடிங் பிசினஸ் செய்துவருவதாக என்னிடம் சுனிதா கூறி நம்பவைத்தார்.
அவருடைய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், ஓராண்டிற்குள் முதலீடு செய்ததொகையை 2 மடங்கு லாபத்துடன் தருவதாகக் கூறினார். நிறுவனத்தில் என்னை இயக்குநராக சேர்த்துக்கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, என்னிடமிருந்து 20.03.2020 முதல் 31.10.2020 வரையிலான காலத்தில் சிறுக சிறுக பல்வேறு தவணை முறையில் வங்கி பரிவர்த்தணை மற்றும் ரொக்கமாக ரூ.12.49 கோடி மற்றும் 36 சவரன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டார்.  
சுனிதா சொன்னது போல் எந்தவித லாபத்தையும் தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். மேலும் சுனிதா நடத்திவந்த Sun Boutique Pvt Ltd and Koyambedu Finance Association Pvt Ltd ஆகிய நிறுவனங்கள் போலியான நிறுவனங்கள் என்பதும், அந்த நிறுவனங்கள், கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை என்றும், இல்லாத ஒரு நிறுவனத்தை இருப்பதுபோல் போலியாக அலுவலகத்தை உருவாக்கி, போலியான சான்றிதழ்களை தயாரித்து என்னிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்பதும் எனக்கு பிறகுதான் தெரியவந்தது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுங்கள்’’ என புகாரில் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் 23.02.2022-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சுனிதாவை நேற்று கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று கொலைமுயற்சி வழக்கில் அந்தமானில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் செங்கல்பட்டு ரவுடியுமான ரஞ்சித் என்பவரின் மனைவிதான் சுனிதா என்பது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ரஞ்சித்தை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
குறிப்பாக சுனிதாவிடம் பணத்தைக் கேட்க சீனிவாசன் முயன்றபோது தனது கணவனான காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சித்தை வைத்து மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று கிண்டி போலீசார் கொலைமுயற்சி வழக்கில் அந்தமானில் வைத்து ரஞ்சித்தை கைது செய்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து, மோசடி வழக்கிலும் ரஞ்சித்தை கைதுசெய்யும்  நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  
ரவுடி கணவனும், மோசடி செய்த மனைவியும் வேறு ஏதேனும் மோசடி செய்துள்ளார்களா எனக் கண்டுபிடிப்பதற்கு, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுனிதாவை ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில்  சிறையில் அடைத்தனர்.