குற்றம்

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

webteam

பூவிருந்தவல்லி அருகே கடன் தொல்லையால் கணவன் தற்கொலை செய்ததாக நாடகமாடி கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன்(39). இவர் கார் ஓட்டுநகராக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி பவானி(31). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தரணிதரன் கடந்த 22 ம் தேதி கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்கு தானே கழுத்தை இறுக்கி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் இறந்து போன தரணிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தரணிதரன் கழுத்து இறுக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் அவரது செல்போன் அழைப்புகளை சோதனை செய்தபோது ஒரு நபர் அடிக்கடி பேசி வந்ததும் தரணி தரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் வீட்டிற்கு வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது கணவனை காதலனோடு சேர்ந்து கொலை செய்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட தரணிதரன் நண்பரான பூந்தமல்லி, திருமால் நகரைச் சேர்ந்த தினேசுக்கும்(31) பவானிக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தங்களது காதலுக்கு கணவர் தரணிதரன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 21 ம் தேதி பூச்சி மருந்துக்கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து விடும்படி பவானியிடம் தினேஷ் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இரவு போதையில் வந்த தரணிதரனுக்கு அவரது மனைவி இரவு உணவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டு விட்டு தூங்கிய தரணிதரன் 22 ம் தேதி காலையில் வழக்கம் போல் எழுந்து வாந்தி மட்டும் எடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றுள்ளார். பூச்சி மருந்து கொடுத்தும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த பவானி காதலன் தினேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தினேஷ் வீட்டிற்கு வருவதற்குள் தனது இரண்டு மகள்களையும் மாடியில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் பவானி. தினேஷ் வீட்டிற்கு வந்ததும் படுத்து கொண்டிருந்த தரணிதரனை கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி இருவரும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டது போல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றி விட்டு தினேஷ் அங்கிருந்து சென்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.