குற்றம்

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் கத்தி, கற்களால் கணவனை கொடூரமாக தாக்கிய மனைவி

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் கத்தி, கற்களால் கணவனை கொடூரமாக தாக்கிய மனைவி

Sinekadhara

பண்ணந்தூர் காலனியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரை கத்தி மற்றும் கற்களால் மனைவி தாக்கினார். படுகாயமடைந்த கணவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் இராணுவ வீரர் நரேஷ்குமார் (39). இவருக்கும் அதே கிராமத்தை சேரந்த சசிகலாவுக்கும் திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு சசிகலாவின் தந்தை மகாலிங்கத்தை நரேஷ்குமார் கொன்றதாக வழக்கு உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சசிகலா வீட்டிற்கு சென்ற நரேஷ்குமார் அவரை சமாதானப்பத்தி வீட்டிற்கு வர அழைத்துள்ளார்.

பேச்சுவார்த்தை சண்டையாக மாறி கைகலப்பாக உருவெடுத்ததையடுத்து, ஆத்திரமடைந்த சசிகலா அருகே இருந்த கத்தியை எடுத்து நரேஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நரேஷ்குமாரின் கை, கால், தலை, முகம் என அனைத்து இடங்களிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். ஆத்திரம் தீராத சசிகலா அருகே இருந்த கல்லைக் கொண்டும் தாக்கியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் நரேஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கணவர் தாக்கியதில் இடுப்பில் காயமடைந்த சசிகலா போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பண்ணந்தூர் பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.