குற்றம்

அருண் பிரகாஷ் கொலையில் நடந்தது என்ன? -ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம்

அருண் பிரகாஷ் கொலையில் நடந்தது என்ன? -ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம்

webteam

அருண் பிரகாஷ் கொலையில் நடந்தது என்ன என்பது குறித்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் மற்றும் வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டனர். இதில் அருண்பிரகாஷ் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யோகேஸ்வரன் குணமடைந்து வீடு திரும்பினார்.

( அருண்பிரகாஷ்)

இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வாபா என்ற ரசாக் அலி,வெள்ளை சரவணன் என்ற சரவணக்குமார் மற்றும் விஜய் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இக்கொலை தொடர்பாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “
கடந்த மாதம் 30-ந்தேதி மதியம் 12 மணிக்கு ராமநாதபுரம் வசந்த நகர் பாத்திர கடை அருகே அருண் பிரகாஷ், சரத்குமார், பாண்டியராஜன், காமாட்சி யோகேஸ்வரன் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சரவணன், சபிக், ரகுமான் ஆகியோர் எதிரே வந்தனர்.


ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததால் எங்க பகுதிக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேட்டு இருவரையும் காமாட்சி தாக்கியுள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில் காமாட்சியை தாக்க லெப்ட் சேக், விஜய் உள்ளிட்டோர் வந்துள்ளனர். இந்நிலையில் காமாட்சி அங்கிருந்து தப்பவே, அவருடன் இருந்த அருண் பிரகாஷ், மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவரையும் அவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அருண் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யோகேஷ்வரன் காயமடைந்தார். இந்த வழக்கில் மேலும் 7 பேரை கைது செய்ய ராமநாதபுரம் டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்” என்றார்.