குற்றம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு விரைவில் சம்மன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு விரைவில் சம்மன்

rajakannan

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என விசாரணை கமிஷன் தலைவர் ராஜேஸ்வரன் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அறங்கேறியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணைக்காக சேலம் வந்த அவர் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த உள்ளார். இதில் 11 பேரிடம் விசாரணை நடக்கிறது. முதல் நாளான இன்று 7 பேரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து நாளை 4 பேரிடம் விசாரணை நடத்த உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னை பட்டினம்பாக்கத்தில் தீ வைத்தவர்கள் யார் என்ற தகவல் தருமாறு டி.ஜி.பியிடம் கேட்டிருப்பதாக கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1951 பேரிடம் விசாரணை நடத்த உள்ளது. இதில் 447 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதில் 108 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சுமார் 8 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கருத்து கூறிய நடிகர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார்.