குற்றம்

`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்

`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்

நிவேதா ஜெகராஜா

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள், இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வரதட்சணைகளுடன் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட விஸ்மயா, மேலும் வரதட்சணை கேட்டு கணவரால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். கணவரின் மோசமான துன்புறுத்தலால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கேரள மாநிலத்தின் பெண்கள் வரதட்சணை கொடுக்க முடியாது என போராட்டம் முன்னெடுக்க தொடங்கினார்கள். இவர்களுக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். விஸ்மயா மரணத்தின்போது, அந்த சம்பவத்தைத் தொடர்ந்து வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்க 24 மணி நேர ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி: 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது போலீஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ எனவும் நீதிபதி தெரிவித்தார். அவ்விவரங்கள் இன்று வெளியாகுமென சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான தண்டனை விவரத்தின்படி 10 வருட சிறைத்தண்டனையும் ரூ.12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகையில் 2 லட்சம் ரூபாயை விஸ்மயாவின் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிசி 304ன் கீழ் 10 ஆண்டுகளும், அதில் 306ன் கீழ் 6 ஆண்டுகளும், 498ன் கீழ் 2 ஆண்டுகளும் அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனைகளை ஒன்றாக அனுபவித்தாலே போதும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பது உறுதியாகியுள்ளது.