குண்டர் சட்டத்தில் இருவர் கைது pt desk
குற்றம்

விழுப்புரம்: குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி மோசடி - குண்டர் சட்டத்தில் இருவர் கைது

சென்னையில் துணிக்கடை நடத்தி வருபவரிடம், இந்தியா மார்ட் செயலி மூலம் பழகி குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடக்கப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

சென்னையை அடுத்த ராயபுரத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹீம் என்பவரிடம், ஊத்தங்கரையைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் மாதம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் எனும் இருவர் இந்தியா மார்ட் என்ற செயலி மூலம் பழகியுள்ளனர். இப்ராஹீமிடம், “தங்கத்தை மார்க்கெட் விலையை விட 7 சதவிகிதம் குறைவாக தருகிறோம்” என அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பிய இப்ராஹீம், அவரது நண்பர்க்ள் அக்பர் அலி, முஸ்தபா, ஜாபர், டேவிட் ஆகியோர் கடந்த 07.08.2024 ஆம் தேதி சென்னையிலிருந்து செஞ்சி அருகேயுள்ள சொக்கநந்திற்குச் சென்றுள்ளனர்.

Arrested

அப்போது காரில் வந்தவர்கள் இப்ராஹீம், அக்பர் அலி, முஸ்தபா, ஜாபர், டேவிட் ஆகியோரை தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 7 லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை, இரண்டு மோதிரம், மூன்று விலையுயர்ந்த செல்போன்களை பறித்துச் சென்றனர். குறைந்த விலையில் நகை தருவதாகக் கூறி மோசடி செய்வதவர்களிடம் நகை பணத்தை இழந்த இப்ராஹீம், இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பன்னீர் செல்வம் சீனிவாசன் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க மாவட்ட எஸ்பி தீபக் சிவாச், ஆட்சியர் பழனிக்கு பரிந்துரை செய்ததின் பேரில் சீனிவாசன், பன்னீர் செல்வத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் பன்னீர்செல்வம் புழல் சிறையிலும், சீனிவாசன் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.