கைதான முருகன் pt desk
குற்றம்

விழுப்புரம்: கன்னத்தில் அறைந்ததில் சுருண்டு விழுந்த ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்

விழுப்புரம் அருகேயுள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட கைகலப்பில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் ஆயந்த்தூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கு, அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 25 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அதில் 20 ஆயிரத்தை சேகர் கொடுத்துவிட்ட நிலையில், 5 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு சேகர், ஆயந்த்தூரில் உள்ள ஒரு டீக்கடையில் தனது சகோதரர் விஜயகுமாருடன் டீ அருந்தியுள்ளார்.

Police station

அப்போது அங்கு வந்த முருகன், சேகரிடம் சென்று "5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு செல்" என்று டீக்கடை முன்பாக வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது சேகரின் தம்பி விஜயகுமார், “பொது இடத்தில் வைத்து இப்படி அசிங்கபடுத்துவது சரியல்ல. அண்ணன் தருவார்” என்று கூறியுள்ளார். அதற்கு, “உனக்கு நான் காசு கொடுக்கல... நீ ஏன் நடுவுல வர்ற?” என்று வாக்குவாதம் செய்து சண்டையிட்டுள்ளார் முருகன். இதில் ஒருகட்டத்தில் மேலும் ஆத்திரமடைந்த முருகன், ஆட்டோ டிரைவரான விஜயகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து கீழே தள்ளி உள்ளார்.

இதில், மயக்கமடைந்து கீழே விழுந்த விஜயகுமாரின் தலை கீழே இருந்த கல் மீது பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கானை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகனை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.