செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வரும் விழுப்புரம் வழுதரெட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (42) என்பவருக்கும் கடந்த 2018-ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாண்டியன் தனக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலருடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் சம்பத்திடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சம்பத், பி.இ. படித்து முடித்துள்ள தனது மகன் ஞானவேலுக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி பாண்டியனிடம் கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித்தர தனக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டுமென கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியனின் வங்கிக் கணக்கிற்கு அவர் கேட்ட பணத்தை சம்பத் அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்ற பாண்டியன், சம்பத்தின் மகன் ஞானவேலுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாண்டியனிடம் சென்ற சம்பத், தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தரும்படியும், இல்லையெனில் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படியும் பலமுறை கேட்டுள்ளார். அதன் பின்னரும் பணத்தை தராரதால் ஏமாற்றமடைந்த சம்பத், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.