விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் ஒரு குடும்பத்தின் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஆராயி குடும்பத்தின் மீது நள்ளிரவில் கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் ஆராயின் மகன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஆராயி மற்றும் அவரது 14வயது மகள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆராயின் 14வயது மகள் ஆடைகள் விலகிய நிலையில் விட்டில் இருந்து மீட்கப்பட்டார். இதனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் தொடர்புடைய ஒரு பெண்ணிடமும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. மேலும் இதுதொடர்பாக 6பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணயில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிப்பதாவது, வெள்ளம்புதூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தில்லைநாதன் மீது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள காவல்நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. அவரிடம் இருந்து 30 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆராயி வீட்டிற்கு பணம் நகைகளை கொள்ளையடிக்க வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.