பீகாரில் எருமை மாட்டை திருடுவதாக சந்தேகித்து கிராம மக்கள் இருவரை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ளது கர் அமிர்தா கிராமம். இங்கு சமீபத்தில் 3 எருமை மாடுகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி இக்கிராமத்தில் நள்ளிரவில் இரு இளைஞர்கள் சுற்றி வந்துள்ளனர். இதையறிந்த அக்கிராம மக்கள் கும்பலாகக் கூடி அந்த இருவரை கால்நடை திருடர்கள் எனக்கருதி சராமாரியாக தாக்கினர். இதையடுத்து இரு இளைஞர்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம மக்களால் தாக்கப்பட்ட இரு இளைஞர்கள் கால்நடைகள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் கும்பல் படுகொலைகள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக மாறியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.