பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது, இடைத்தரகர்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் சென்னையில் 2 காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 காவல் ஆய்வாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக தற்போது பணியாற்றி வருபவர் சாம் வின்சென்ட். சைதாப்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக தற்போது பணியாற்றி வருபவர் சரவணன். இவர்களது 2 பேரின் வீடுகளிலும் இன்று காலை 9 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் பி பிளாக்கில் உள்ள காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்த வந்தனர். அப்போது அவர் பணியில் இருந்ததால், பணியில் இருந்த சாம் வின்சென்டை வீட்டிற்கு வரவழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை பூட்டிய வீட்டை திறந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைப்போல மேடவாக்கத்தை அடுத்த புழுதிவாக்கத்தில் உள்ள காவல் ஆய்வாளர் சரவணன் வீட்டில் இன்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 8-1-2018 முதல் 15-5-2018 வரை கால கட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் சென்னை காவல்துறையில் செயல்பட்டு வரும் பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது அத்தொழில் செய்து வரும் இடைத்தரகர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகார் தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறையின் கீழ் செயல்படும் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றியுள்ளனர்.
பாலியல் தொழில் தடுப்புப் பிரிவில் இவர்களின் பணிக்காலத்தில் அத்தொழிலில் ஈடுபடும் புரோக்கர்களிடமும், மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தும் மசாஜ் பார்லர் உரிமையாளர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு சென்னையில் பாலியல் தொழில் தடையின்றி நடப்பதற்கு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் இருவரும் மாறி மாறி லஞ்சம் பெற்றதும், பெரும் லஞ்சத்தை பங்கு பிரிப்பதிலும் இரண்டு காவல் ஆய்வாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும் 2018-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பாலியல் தொழில் தடுப்பு பிரிவு சென்னை நகர் மற்றும் புறநகர் என இரண்டு குழுக்கள் உள்ளன. அதில் சென்னை நகர் குழுவிற்கு காவல் ஆய்வாளராக வரும் நபருக்கு அதிக லஞ்சம் வருவதாகவும் புறநகரில் லஞ்சம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னை நகரை யார் கைப்பற்றுவது என காவல் ஆய்வாளர் சாம் வின்செண்ட் மற்றும் சரவணன் இருவருக்கும் இடையே கடும் மோதல் 2019-ம் ஆண்டு நடந்தது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்தி: மசாஜ் சென்டரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 40 பேர் மீது போக்சோ வழக்கு
சென்னையயை கைப்பற்ற இந்த இரண்டு காவல் ஆய்வாளர்களும் மாறி மாறி அப்போதைய அமைச்சர் ஒருவரிடம் சிபாரிசுக்கு சென்றதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி பணியிட மாற்றம் செய்து அப்போதைய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் லஞ்ச புகாருக்கு ஆளான காவல் ஆய்வாளர்கள் சாம் வின்செண்ட் மற்றும் சரவணன் ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவருக்கும் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடந்து வருவது குறிப்பிட்டத்தக்கது.