குற்றம்

மதுரை: கொலை முயற்சியில் கைதானவருக்கு காவலர் கண்முன்னே கஞ்சா சப்ளை? - அதிர்ச்சி வீடியோ

மதுரை: கொலை முயற்சியில் கைதானவருக்கு காவலர் கண்முன்னே கஞ்சா சப்ளை? - அதிர்ச்சி வீடியோ

webteam

மதுரையில் காவலர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவரிடம் கஞ்சா சப்ளை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்து கவனக்குறைவாக இருந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை சம்மட்டி புரத்தைச் சேர்ந்த முத்தமிழ் என்பவர் நேற்று இரவு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஆனந்தன் என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து ஆனந்தன் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ். எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தமிழனை கைது செய்தனர்.

பின்னர், முத்தமிழனையை நீதிமன்றத்திற்கு அனைத்து செல்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கையில் காயத்துடன் சிகிச்சை பெற வந்தது போல நடித்து கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட குற்றவாளியின் கையில் கஞ்சா பொட்டலத்தை கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு மருத்துவமனைக்குள் புறகாவல் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்ட இளைஞர் காவலருடன் இருக்கும் குற்றவாளியிடம் காவலர் பேசிக்கொண்டிருந்தபோது கஞ்சாவை வழங்கிசெல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

கஞ்சாவை கொடுத்த பின்னர் ஏதோ எதிர்பாராத விதமாக சந்திப்பது போல பேசிக்கொள்கின்றனர். அப்போது அவரை காவலர் போக சொல்லி கூறுகிறார். அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த குற்றவாளியிடம் கஞ்சா வழங்கப்பட்டதா? இல்லையெனில் பிளேடு, சிம் கார்டு உள்ளிட்ட வேறு ஏதேனும் பொருட்கள் கொடுக்கப்பட்டதா என காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த வீடியோ குறித்து மதுரை காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, வீடியோ குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், கவனக்குறைவாக இருந்த சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொருளை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.