குற்றம்

“பாதிக்கப்பட்டிருந்தால் பெண் புகார் கொடுக்கலாமே” - பாதிரியார்களின் அலட்சிய பதில்

webteam

கேரளாவில் பெண் ஒருவர் சர்ச் பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இதுவரை இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த நிர்வாகம் மவுனம் கலைத்திருக்கிறது 

பாதிரியார்கள் மீதான இந்த குற்றச்சாட்டை வெளிக் கோண்டு வந்த தி நியூஸ் மினிட் இணையதள நிருபர் மேகா , நிர்வாகத்தை அணுகி விளக்கம் கோரினார். அதற்கு பதிலளித்த அவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த பெண்ணும் அவரது கணவரும் மட்டுமே மாறி மாறி கூறி வருகின்றனர், ஆனால் அவர்கள் தரப்பில் எந்த புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை; ஏன் இதுவரை புகார் தரவில்லை, குற்றம் சுமத்துபவர்களே புகார் தர வேண்டுமே தவிர நாங்கள் இல்லை என்றனர் 

தொடர்ந்து பேசிய நிர்வாகத்தினர் “ காவல்துறையில் புகார் கொடுக்க விடாமல் அவர்களை தடுப்பது என்ன ?, எங்களிடம் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில் முதற்கட்டமாக இது குறித்த உண்மை நிலையை அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது, இளம் வயது சிறுமிக்கு ஒருவேளை நேர்ந்திருந்தால் நிர்வாகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும், ஆனால் இவரோ திருமணமான பெண், அவர்தான் புகார் தர முடியும் என்றும் கூறினர்

குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 பேரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என கேட்டபோது , அவர்கள் 5 பேருக்கும் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகத்தினர் கூறினர். மேலும் மார்ச் மாதமே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கணவர் புகாரளித்ததாகவும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்

மேலும், 5 பேர் மீதும் குற்றச்சாட்டு உறுதியானால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை பாயும் என்றும், புகார் என்பதால் தொடர்புடைய அனைவருக்கும் உரிய வாய்ப்பு வழங்கி உண்மையை கொண்டு வர சர்ச் நிர்வாகம் முயல்வதாகவும் அதுவே இயற்கை நீதி அடிப்படையில் சரி என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

பின்னணி 

கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அது அவரை மிகவும் காயப்படுத்த, தனது மத வழக்கப்படி ஆலய பாதிரியாரிடம் சென்று விஷயத்தை கூறி பாவ மன்னிப்பு கோரியுள்ளார். கிறிஸ்தவ மத வழக்கப்படி பாவ மன்னிப்பு சடங்கு சமயத்தில் மக்கள் கூறுவதை பாதிரியார்கள் எக்காரணம் கொண்டும் வெளியே கூறக் கூடாது , ஆனால் அந்த பாதிரியாரோ சமப்ந்தப்பட்ட பெண்ணை இந்த விவகாரத்தை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு இன்னும் 4 பாதிரியார்களிடம் கூறி அவர்களை கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அவரது கணவருக்கு தெரிய வர , பாதிரியார்கள் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.