அரசு மதுபானகடையில் சுவற்றில் துளை போட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து மறைத்துவைத்திருந்த மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கசம் என்ற பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தின் காரணமாக மதுக்கடை மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் முதலில் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை காலி அட்டை பெட்டிகொண்டு மூடியுள்ளனர். தொடர்ந்து கடையினுள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து, அதனை அருகில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்துள்ளனர். ஆனால் இது எப்படியோ அந்தப்பகுதி மக்களுக்குத் தெரியவர, அந்தமக்கள் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டர்.கண்காணிப்பு கேமாரா காட்சிகளை ஆய்வு செய்ய சென்று பார்த்த போது கொள்ளையர்கள் தந்திரமாக கேமாராவின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதே மதுக்கடையில் கடந்த மாதம் மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.