கோவை ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலரும், உதவியாளரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமி என்பவர் காலில் விழுந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாகியது. அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த கிராம உதவியாளரை காலில் விழ வைத்ததாக கோபால்சாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், முத்துசாமியே, கோபால்சாமியை தாக்கியதாகவும், பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். விஏஓ அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தின் முழு வீடியோப் பதிவை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங்கிடம், கோபால்சாமி தரப்பினர் அளித்தனர்.
அதில், திட்டமிட்டே சாதிரீதியாக இந்த விவகாரம் சித்திரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. புதிய வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தி, அதில் உண்மை நிரூபிக்கப்பட்டால் ஒட்டர்பாளையம் விஏஓ கலைசெல்வி, உதவியாளர் முத்துசாமி மீது துறைரீதியான நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.