குற்றம்

“உங்கள் மகன் இன்னும் பீஸ் கட்டவில்லை” - கல்லூரி பெயரில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்

“உங்கள் மகன் இன்னும் பீஸ் கட்டவில்லை” - கல்லூரி பெயரில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்

webteam

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி பெயரில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது; மேலும் 2 பேரை தேடி வருகிறது காவல்துறை.

சென்னை வளசரவாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோரின் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் தாங்கள் கல்லூரியிலிருந்து பேசுவதாகவும் தங்கள் மகன் இன்னும் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனவும் உடனடியாக கல்விக்கட்டணத்தை செலுத்துமாறும், இல்லையென்றால் தங்கள் மகனை கல்லூரியிலிருந்து நீக்கி விடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக கல்லூரிக்கு சென்று கல்லூரி நிர்வாகத்திடம் தாங்கள் கட்டணம் செலுத்தி விட்டோம் எனவும் பிறகு ஏன் எங்களுக்கு செல்போனில் கட்டணம் செலுத்தவில்லை என கூறினீர்கள் என வினவினர். இதனை கேட்டதும் கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது போன்ற எந்த அழைப்பும் தங்கள் கல்லூரியிருந்து வரவில்லை எனவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராயலாநகர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பெற்றோருக்கு வந்த செல்போன் அழைப்புகளின் நம்பர்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில் பெற்றோருக்கு வந்த நம்பர்கள் போலியான செல்போன் நம்பர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து, செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்துவந்த பெங்களூரைச் சேர்ந்த செந்தில்குமார்(42), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது போலீஸ். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஷேக் அகமது(27), கேரளாவைச் சேர்ந்த சாதிக்(42), அப்துல் லதீப்(54), ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட நான்கு பேரில் சிம்கார்டு விற்பனை செய்து வந்த செந்தில்குமார், சிம் கார்டு வாங்க வரும் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை வைத்துக்கொண்டு, அவர்களின் பெயரிலேயே போலி சிம் கார்டுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். கைதான மற்ற மூன்று பேருடன் கூட்டாக சேர்ந்து தனியார் கல்லூரி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பட்டியலை எடுத்து கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்” என தெரிவித்தனர்.

இதேபோல் பல இடங்களில் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து போலியான சிம் கார்டுகள், செல்போன் மற்றும் கார் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சபீர், நவ்ஷாத் ஆகிய 2 பேரை தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.