தலித் சிறுவன் துன்புறுத்தபட்ட படம் வீடியோ படம்
குற்றம்

ம.பி: போலியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; இளைஞர்களை மலம் உட்கொள்ள கட்டாயப்படுத்திய அவலம்!

சம்பந்தப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து அவரது பாதத்தை நீர் ஊற்றி கழுவினார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள் மத்திய பிரதேசத்தில் இருந்து மற்றொரு சம்பவம் வெளியே வந்துள்ளது.

Jayashree A

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அந்த அருவருக்கத்தக்க செயலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து அவரது பாதத்தை நீர் ஊற்றி கழுவினார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள் மத்திய பிரதேசத்தில் இருந்து மற்றொரு சம்பவம் வெளியே வந்துள்ளது.

போபாலை அடுத்த சிவபுரியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் (ஒருவர் ஜாடவ் (Jatav) என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்ப்பின் கேவாட் (Kewat) சமூகத்தைச் சேர்ந்தவர்) மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டின் பேரில் உள்ளூர் மக்களால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், மலத்தை உட்கொள்ளும்படி அவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாது அவர்களை வலுகட்டாயமாக அவமானம் படுத்தும் முறையில் அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து நகரம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் நர்வார் பகுதியின் வார்காடி என்ற இடத்தில் ஜூன் 30 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. சிறுநீர் கழித்த சம்பவத்தை அடுத்து இதுவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞரின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஷிவ்புரி மாவட்ட காவல்துறை உள்ளூர் வாசிகள் ஆறு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது. இவர்களிடம் விசாரணை செய்ததில், இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையானது ஆதாரமற்றது எனவும், சொத்து தொடர்பாக எழுந்த பிரச்சனையில் இவ்விளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “இந்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட கொடுமையானது, மனித குலத்தை அவமானப்படுத்தும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ”இனியும் இதுபோன்ற செயல்களை செய்ய அனுமதிக்கக்கூடாது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (NSA) செயல்படுத்தவும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட அவர்களின் கட்டிடங்களை இடித்துத் தள்ளவும் உத்திரவிட்டுள்ளது” என்றார்