குற்றம்

மூட்டையில் துண்டுத் துண்டான உடல்: மோதிரத்தால் சிக்கினார் மனைவி!

மூட்டையில் துண்டுத் துண்டான உடல்: மோதிரத்தால் சிக்கினார் மனைவி!

webteam

கணவனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் வைத்து வீசிய மனைவி உட்பட அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

மும்பையின் கல்யாண் அருகே உள்ளது டிட்வாலா. இந்த ஊரில் உள்ள நிறுவனம் ஒன்றின் அருகில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் ரத்தம் கசிந்திருப்பதாகவும் செக்யூரிட்டி ஒருவர் போலீசுக்கு போன் செய்தார். அவர்கள் ஸ்பாட்டுக்கு விரைந்து பிரித்துப் பார்த்தனர். தலை மற்றும் கால்கள் இல்லாத இளம் வயது ஆண் உடல் இருந்தது. இடது கையில் இரண்டு வெள்ளி மோதிரம் இருந்தது. போலீசுக்கு இதுமட்டுமே ஆதாரம். உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர். இந்தச் சம்பவம் நடந்தது கடந்த 30ம் தேதி.

இந்நிலையில் அந்தப் பகுதியில் யார், யார் காணாமல் போயுள்ளனர் என்ற விவரத்தைச் சேகரித்தனர். அதில் ரவீந்திரா சின்ஹா (32) என்பவரும் ஒருவர். அவர் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அவர் மனைவி சுஷ்மா, முலுண்டில் உள்ள அம்மா வீட்டுக்கு சின்ஹா சென்றதாகவும் ஆனால் திரும்பி வரவில்லை என்றும் கூறினார். சின்ஹாவின் அம்மாவிடம் விசாரித்தால், தன் மகன் இங்கு வரவே இல்லை என்றார். 

குழப்பமடைந்த போலீசார், பின்னர் அவர் வேலை பார்த்த நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். அவரது மேலதிகாரி, போலீசாருக்கு சின்ஹாவின் போட்டோ ஒன்றைக் காண்பித்தார். அப்போதுதான், மோதிரம் போலீசாரில் கண்ணில் பட்டது. போட்டோவில் இருந்த மோதிரமும் தலை, கால் இல்லாத உடலில் கிடைத்த மோதிரமும் ஒன்றுதான் என்பது புரிந்தது.

இதையடுத்து சின்ஹாவின் மனைவி சுஷ்மாவிடம் சென்று விசாரித்தனர். முன்னுக்குப் பின்னாக உளறியுள்ளார். ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து ’முறை’யாக விசாரித்தனர். அப்போது அவர் கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடக்கும் என்றும் அப்போது சின்ஹா, மனைவியை எட்டி உதைத்தார் என்றும் கூறப்படுகிறது. மாமியார் அனிதாவையும் தாக்கினாராம். இதனால் கோபமடைந்த மனைவியின் சகோதரன் கவுதம், சின்ஹாவை சரமாரியாக தலையில் அடித்துள்ளார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து ஒரு சாக்குமூட்டையில் உடலைக் கட்டி, வீட்டின் பாத்ரூமில் இரண்டு நாட்களாக வைத்திருந்தனர். துர்நாற்றம் வீச ஆரம்பித்ததும் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி வெவ்வேறு பகுதியில் வீசியுள்ளனர். 

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இத்தகவலை டிட்வாலா போலீஸ் நிலையத்தின் மூத்த போலீஸ் அதிகாரி பிரதீப் கப்சே தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.