சிறுமி உட்பட இருவரை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த இவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கீன நடவடிக்கையால் 2019 ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யபட்டார். இதனையடுத்து ஆத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்தார். இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, அங்கிருந்த நடன பள்ளியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையின் பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். தினமும் டியூசனுக்கு வந்து சென்ற சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறிய மணிமாறன் சிறுமியை கடத்திச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் கடத்தல், போக்சோ உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்குச் சென்ற மணிமாறன், புதுமண தம்பதி எனக்கூறி அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் வீட்டின் உரிமையாளரின் 19 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணையும் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற மணிமாறன் தலைமறைவானார்.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக புகார் அளிக்கவே கன்னியாகுமரி மாவட்ட போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியையும், கன்னியாகுமரியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் அவரது தோழியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆசிரியர் பிடித்து வைத்துள்ளது குறித்து தெரிவிக்கவே உடனடியாக அவர், பெண்ணின் பெற்றோருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த செல்போன் எண்ணின் மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பழம கண்டறிந்த கோவை தனிப்படை போலீசார், ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறுமி மற்றும் இளம் பெண் ஆகிய இருவரையும் மீட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை கோவை அழைத்து வந்த போலீசார், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவையை சேர்ந்த சிறுமி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த இளம் பெண் ஆகிய இருவரையும் திருப்பதியில் தெரு தெருவாக டீ விற்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 8 மாதங்களாக எங்கு இருந்தார்கள் என்பது குறித்தும், வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.