குற்றம்

பொதுமக்களை அரிவாளால் தாக்கிய இருவர்: கை, கால் முறிவடைந்த நிலையில் கைது

பொதுமக்களை அரிவாளால் தாக்கிய இருவர்: கை, கால் முறிவடைந்த நிலையில் கைது

நிவேதா ஜெகராஜா

அம்பத்தூரில் சாலையில் சென்ற பொதுமக்கள் 5 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு, ஆட்டோவில் தப்பி ஓடிய ரவுடிகளால் அச்சம் நிலவியுள்ளது. அதே ரவுடிகள், கத்தியை சுழற்றி மதுக்கடையில் தகராறு செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தற்போது இருவரையும் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

சென்னை அம்பத்தூர் அடுத்த சண்முக புறம் பகுதியை கட்டிட வேலை செய்து வருபவர் மாணிக்கம் (வயது 53). இவர் நாய்களுக்கு பிஸ்கெட் வாங்க அருகிலுள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர். இதனை கண்டு சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது சண்டையிட்டு கொண்டிருந்த இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணிக்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மாணிக்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போகும் வழியில் அதே பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஸ்ரீராம் என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுகியுள்ளனர். இதேபோன்று புண்ணிய குமார் (வயது 50) என்பவரையும் சரமாரியாக வெடியுள்ளார். இதில் அவருக்கு வலது காலில் வெட்டு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த பிரபாகரன் (வயது 30) என்பவரையும் வெட்டியுள்ளார். மேலும் வினோத் குமார் (வயது 35) அவரையும் வெடியுள்ளார். இதில் அவருக்கு வலது, இடது கைகளில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் இருவர் கத்தியுடன் சுற்றுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம் காவல்துறையினர், துரத்திச்சென்று ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். அதற்குள் மற்றொரு ரவுடி தப்பி ஓடியிருக்கிறார்.

பிடிபட்ட ரவுடியிடம் விசாரணை செய்ததில், அவர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருள் நகர் முருகம்பேடு பகுதியை சேர்ந்த கணேசன் என்கின்ற கணேஷ் குமார் என்பதும், இவர் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் பல நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய மற்றொரு ரவுடி ரேசர் கணேசன் என்பவர் மீது பட்டாபிராம் திருநின்றவூர் வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர்கள் அப்பகுதி பதிவேடு குற்றவாளிகள். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அம்பத்தூர் பகுதியில் பொதுமக்களை வெட்டியது தாங்கள் இருவர் தான் எனவும் காவல்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய ரவுடி ரேசர் கணேஷ் என்பவரை அம்பத்தூர் தனிப்படை காவல்துறை காவல்துறை தேடி வந்துள்ளனர்.

பின் ரேசர் கணேசன், புழல் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறை அங்கு பதுங்கி இருந்த ரவுடி ரேசர் கணேசனை பிடிக்க முயன்றனர். காவல்துறையினரிடம் சிக்கமால் இருக்க அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளார். இதில் அவனது இடது கால் முறிவு ஏற்பட்டது இதன்பின்னர் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி, மாவு கட்டு போட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரேசர் கணேசனுக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டநிலையில், அம்பத்தூரில் பிடிக்கப்பட்ட மற்றொருவருக்கு காலில் அடிப்பட்டிருக்கிறது. அவருக்கு மாவுகட்டு போடப்பட்டு, அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் சம்பவத்தன்று கத்தியைச் சுழற்றி அம்பத்தூரில் உள்ள ஒரு மதுபான கடையில் இவர்கள் தகராறு செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் மது கேட்டு தகராறு செய்வதும் போதும் தரமறுத்த பின்னர் கத்தியை காட்டி மிரட்டுவதும் பின்னர் வெளியே நின்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை கத்தியால் சேதப்படுத்தி செல்வது போல காட்சிகள் பதிவாகி இருந்தது.

பொதுமக்களை அச்சுறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.