குற்றம்

ஆலந்தூர்: முன்பகையில் ஆட்கடத்தலிலும் ஈடுபட்ட ரவுடிகள்... 2 பேரை கைது செய்தது காவல்துறை

ஆலந்தூர்: முன்பகையில் ஆட்கடத்தலிலும் ஈடுபட்ட ரவுடிகள்... 2 பேரை கைது செய்தது காவல்துறை

webteam

சென்னையில் தலைமறைவாக இருக்கும் ரவுடியொருவரின் இருப்பிடத்தை அறிய எதிர்தரப்பினரால் இளைஞரொருவர் கடத்திப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கிண்டி மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில், கடந்த 10 ஆம் தேதி மாலை அரவிந்த் (22), என்ற நபரை இருவர் கடத்தி சென்றதாக கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பேரில் கிண்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர். இதற்கிடையே அரவிந்தை கடத்திய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவரை கடத்திய நபர்கள் அவரை அடித்து வீட்டினருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர் விசாரணையில் அரவிந்தை கடத்திய விவகாரத்தில் ஆலந்தூரை சேர்ந்த வீரமணிகண்டன் (23), தாம்பரத்தை சேர்ந்த ஜெய்குமார் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இருவரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நாகூர் மீரான் என்பவரின் ஆட்கள் எனவும், ரவுடி ராபின் எங்கு இருக்கிறான் என்பது குறித்து கேட்டறிய அரவிந்தை கடத்தியதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே மீரான் கொலை காரணமான முன்விரோதத்தில் நேற்று சுமார் 20 பேர் ஆலந்தூரில் ரவுடிசம் செய்து கைதாகியிருந்தனர்.