குற்றம்

கந்துவட்டி கொடுமையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு: ரயில்வே ஊழியர் உட்பட இருவர் கைது

kaleelrahman

கோவில்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டை சேர்ந்த இருளப்பன் என்பரவது மகன் சுரேஷ் (37). இவர் கோவில்பட்டியில் உள்ள பருத்தி பஞ்சு குடோனில் வேலை பார்த்து வருவதோடு பஞ்சு வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில், கடந்த 16ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சுரேஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்த சண்முகதுரை (60) மற்றும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர் மகாராஜன் (40) கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த மனோஜ் (24) ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இதையடுத்து இவர் வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சண்முகதுரை, மகாராஜன், மனோஜ் ஆகியோர் வீட்டிற்கு வந்து பணத்தை உடனே தருமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டை விற்று விரைவில் கடனை அடைத்து விடுவதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். அதன்பிறகும் 3 பேரும் உடனடியாக வட்டி பணத்தையும் அசலையும் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சுரேஷ் சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் நேற்று முன்தினம் சுரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி கதிரவன், கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சுரேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சண்முகதுரை, மகாராஜன், மனோஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே ஊழியர் மகாராஜன், மனோஜ் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் சண்முகதுரையை தேடிவருகின்றனர்.