Accused pt desk
குற்றம்

ஆம்பூர்: தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இருவர் கைது – 2 லாரிகள் பறிமுதல்

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்ததாக இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான 2 லாரி மற்றும், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான இந்திரா நகர், மாங்காய்தோப்பு, மாதனூர், மற்றும் வெள்ளக்கல் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் கொள்ளைச் சம்பவம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து தொடர் திருட்டில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல்துறையினர், குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

அதில் அவர்கள் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பதிவு எண் இல்லாமல் வந்த நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த தினகரன் மற்றும், மணிவண்ணன் என்பதும், இருவரும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்களை கைது செய்த காவல்துறையினர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான இரண்டு ஈச்சர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.