குற்றம்

போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இருவர் கைது – 1 கிலோ மாத்திரை பறிமுதல்

போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இருவர் கைது – 1 கிலோ மாத்திரை பறிமுதல்

webteam

கூடுவாஞ்சேரி அருகே ஒரு கிலோ போதை மாத்திரையை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், மறைமலைநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது.

இதையடுத்து காவல் துறையினர் தொடர்ந்து அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்து வருகின்றனர். தற்போது இதே பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், போதை மாத்திரை விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த காரண புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீரான் (52) மற்றும் ஊரப்பாக்கம் அசோக்குமார் (45) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் இடையுள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து போதை ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மாத்திரை ஒன்றின் விலை 600 ரூபாய் வரை விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.