குற்றம்

ஜோசப் பட பாணியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை - குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

ஜோசப் பட பாணியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை - குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

webteam

சென்னையில் வீட்டில் தனியே இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தரமணி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (65). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் செய்துவிட்ட நிலையில் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு

இந்நிலையில், 12ஆம் தேதி காலை 6 மணிக்கு சாந்தகுமாரி வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். 8 மணிக்கு புடவை வியாபாரி வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் கதவை தட்டியதால் அப்பெண்ணின் பேரன் பக்கத்து வீட்டில் இருந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது மூதாட்டியின் கன்னத்தில் கடிக்கப்பட்டு சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 9.30 மணியளவில் தரமணி போலீசார் நிகழ்விடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த 3 லட்ச ரூபாய் பணமும் மாயமாகி இருந்ததால் போலீசார் பணத்திற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

எந்த துப்பும் கிடைக்கவில்லை

சம்பவ இடத்தை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடனடியாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். ஆனால் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் யாரும் வந்து செல்லவில்லை எனவும் தெரிகிறது.

மோப்ப நாய் கொடுத்த க்ளூ!

பின்னர் மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு பார்த்த போது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் கைரேகையை பதிவு செய்துவிட்டு சென்றனர். இதனால் கொலையாளி வீட்டை சுற்றித்தான் இருக்க வேண்டும் என உறுதி செய்த தனிப்படை போலீசார் அந்த தெருவில் உள்ள அனைவரின் வீட்டையும் சல்லடை போட்டு தேடி விசாரித்தனர்.

பின்னர் இறந்த பெண்ணின் வீட்டில் முதல் மாடியில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வரும் விஜயபாஸ்கரின் மகள் ஸ்ரீசா மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மகனிடம் விசாரித்தனர். விசாரணையில் ஸ்ரீசாவின் பதில் சந்தேகப்படும் படி இருந்தது.

கொலையில் முடிந்த சாதாரண வாடகை பிரச்னை

இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தங்களை வீட்டை காலி செய்யச்சொல்லி அடிக்கடி சண்டையிட்டதாகவும், நாளை வீட்டை காலி செய்ய இருந்த நிலையில் பெற்றோர் புது வீட்டுற்கு பால் காய்ச்ச சென்ற நேரத்தில் அக்காவும், தம்பியும் சாந்தகுமாரியிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது சாந்தகுமாரி சிறுவனை கடிக்க வந்துள்ளார். உடனே சிறுவன் சாந்தகுமாரியை கீழே தள்ளிவிட்டுள்ளார். ஸ்ரீசா துப்பட்டாவல் அவருடைய கழுத்தை இறுக்கியுள்ளார். சிறுவன் கன்னத்தை கடித்துள்ளார்.

இதில் மூதாட்டி உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்ரீசா. அவரது வீட்டில் இருந்து திருடிச்சென்ற பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். வாடகைதாரர் பிரச்னையால் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோசப் பட பாணியில்..

இந்த கொலை சம்பவமும் அதன் விசாரணையில் கிட்டதட்ட மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தை போலவே உள்ளது. ஜோசப் படத்தில் வீட்டில் தனியாக இருந்த வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பார்கள். அந்த கொலை சம்பவங்கள் ஜோஜூ ஜார்ஜ் புலனாய்வு செய்து விசாரிப்பார். அந்த வீட்டிற்கு தெரிந்த நபர், வீட்டிற்கு அருகில் உள்ள நபர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார். அதேபோல், அண்டை வீட்டைச் சேர்ந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்து அவர்தான் குற்றவாளி என்பதையும் கண்டுபிடிப்பார். அதேபோல், சென்னையில் நடந்த இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.