ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாக இருவர் கைது pt desk
குற்றம்

தி.மலை: ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாக இருவர் கைது - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

webteam

செய்தியாளர்: ஆஜாசெரிப்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம், முந்தைய ஆண்டுகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளார். தமிழ்நாடு அரசு லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்த பிறகு அகர்பத்திகள் உற்பத்தி செய்யும் தொழிலுக்கு மாறியுள்ளார். ஆனால், அந்தப் போர்வையில், ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார்.

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

வந்தவாசி மட்டுமின்றி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சுற்றுப் பகுதிகளிலும் ஏஜெண்டுகள் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்துள்ளார். இதுபற்றிய புகார்கள் குவிந்ததால், காவல்துறையினர் அருணை கண்காணித்து வந்தனர். அந்த வகையில், அருணைப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த அலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, தமிழ்நாடு அரசால் தடை செய்திருக்கும் லாட்டரிகளை, '3 நம்பர் லாட்டரி' என வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த காவல்துறையினர், செங்கல்பட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சையது இப்ராஹிம் என்ற ஏஜெண்ட்டையும் கைது செய்தனர்.

House

ஆன்லைன் லாட்டரி விற்பனை மூலம், வந்தவாசியில் சொகுசு வீடுகளைக் கட்டியுள்ளார் அருண். அந்த வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டபோது, கணக்கில் வராத 48 லட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம், 83 சவரன் தங்க நகைகள் ஆகியவை பிடிபட்டன. சையது இப்ராஹிம் வீட்டில் சோதனையிட்டபோது, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 6 சவரன் நகைகள், 3 அலைபேசிகள், 2 டேப்கள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அருண் மீதும், சையது இப்ராஹிம் மீதும் ஆன்லைன் லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதென காவல்துறையினர் கூறினர். இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் 4 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்களைப் பற்றி விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.