செய்தியாளர்: நவ்பல் அஹமது
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் , இதற்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 சிறுமிகளுடன் கன்னியாகுமரி வந்த இளைஞர்கள் 2 பேர் கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர், இவர்கள் தங்கும் விடுதிக்கு வருவதைப் பார்த்த சிலர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் போலீசார், அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர் அப்போது, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞர் ஆகியோர் ஒரே அறையில் தங்கி இருப்பதும் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களையும், விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமிகள் இருவரும் தங்கள் வீடுகளுக்கு சொல்லாமல் இவர்களுடன் கன்னியாகுமரி வந்தது தெரியவந்தது. மேலும், ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்தவர் சட்டக் கல்லூரி மாணவர் குமார் (22) என்பதும், 4 பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து விடுதி உரிமையாளர் பால்ராஜ் (61), மேலாளர் சிவன் (54) மாணவர் குமார், ஆகிய 3 பேர் மீது போக்சே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.