குற்றம்

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற உலோக சாமி சிலைகள் பத்திரமாக மீட்பு - இருவர் கைது

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற உலோக சாமி சிலைகள் பத்திரமாக மீட்பு - இருவர் கைது

kaleelrahman

சாமி சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக 2 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணத்தை சேர்ந்த சிலர் இரண்டு புராதானமான சரஸ்வதி மற்றும் லட்சுமி சிலைகளை வைத்திருப்பதாகவும் அவைகளை விற்க முயற்சி செய்வதாகவும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினரின் விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சிப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சுமார் 4 கிலோ எடை கொண்ட சரஸ்வதி உலோக சிலையும், சுமார் 2 கிலோ எடை கொண்ட லட்சுமி உலோக சிலையும் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து அந்த சிலைகளை கைப்பற்றுவதற்காக அவர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு சிலைகளை வாங்குவதுபோல் நடித்து கும்பகோணம் சுவாமிமலை அருகே இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சிலைகளை விற்பனை செய்ததற்காக சிலர் இவர்களிடம் கொடுத்ததாகவும் அவர்களுக்குத்தான் எந்த கோவிலிலிருந்து இந்த சிலைகள் எடுத்து வரப்பட்டது என்ற விவரம் தெரியும் என்றும் வாக்கு மூலம் அளித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினரின் மெச்சத்தகுந்த பணியை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.