பாடகர் மனோ - அவரின் மகன்கள் முகநூல்
குற்றம்

பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கு: சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது

ஜெ.அன்பரசன்

சென்னை வளசரவாக்கம் ராதா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஜமீலா (60). இவர் திரைப்பட பாடகர் மனோவின் மனைவி. இவர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 12 ஆம் தேதி புகாரொன்று அளித்திருந்தார். அதில், “செப்டம்பர் 10ஆம் தேதி, ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக காரில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது, அத்துமீறி எங்கள் வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் என்னையும் எனது 2 மகன்களையும் தாக்கியது. பின் நாங்கள் காரில் வைத்திருந்த 2.5 லட்சம் பணம் மற்றும் 12 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நகை திருட்டு

இப்புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நகை மற்றும் பணம் திருடுபோகவில்லை என்பதும் தாக்கியது உண்மை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிருபாகரன், செந்தில்குமார், பிரசாந்த் உள்ளிட்ட எட்டு பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் தலைமறைவாக இருந்த போரூர் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் 16 வயது சிறுவனை வளசரவாக்கம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம், மேலும் தலைமறைவாக உள்ள 6 நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப் பதிவு

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் யார்?

பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர், ரபீக் ஆகியோர் தங்களின் நண்பர்களுடன் இணைந்து சிலரை தாக்கியதாக சில வாரங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரில் தாங்கள் கைதுசெய்யப்பட்டு விடக்கூடாதென பாடகர் மனோவின் மகன்கள் முன்ஜாமீன் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அந்த புகாரை அளித்த இளைஞர்கள்தான், தங்கள் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக ஜமீலா மேற்குறிப்பிட்ட புகாரை அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில்தான், தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, ‘மனோவின் மகன்கள் எங்களை தாக்கினர்’ என புகார் கொடுத்த இளைஞர்கள் மீது, மனோ குடும்பத்தினர் திருட்டு புகார் கொடுத்துள்ளனர். திருட்டு புகாரில் அந்த இளைஞர்கள் இன்று கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

மனோ குடும்பத்தின் தரப்பில் சொல்லப்படுவது என்ன?

சம்பவத்தின்படி, திருட்டு நடந்த நாளன்று மனோவின் மகன்கள் தற்காப்புக்காக திருடர்களை தாக்கியதாகவும், பின்புதான் அத்திருடர்கள் (கிருபாகரன் அவர்களது நண்பர்களை குறிப்பிட்டு) 8 பேருடன் இணைந்து மனோவின் மகன்கள் மற்றும் மனைவி ஜமீலாவை தாக்கியதாகவும் மனோ குடும்பத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

இரு தரப்பிலும் மாறி மாறி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பை சார்ந்த நபர்கள் மீதும் வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.