ஈரோடு அருகே கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி (46). இவர், பஜாஜ் நிறுவனத்தின் இஎம்ஐ கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இஎம்ஐ கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் வாட்ச், இயர் பேட், உயர் ரக ஆடைகள் என ரூ.90,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி, கடந்த 19ம் தேதி ஈரோடு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த சில தினங்களுக்கு முன் வேளாங்கண்ணி ஒரு கடைக்கு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பஜாஜ் இஎம்ஐ கார்டு வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள், அட்டையை சோதனை செய்து, இன்னும் கார்டில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை வேளாங்கண்ணியிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அதே நபர்கள் வேளாங்கண்ணியிடம் போன் செய்து அவரது செல்போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை வாங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து 90 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பஜாஜ் நிறுவன ஊழியர் கமலக்கண்ணன் (23), முன்னாள் பஜாஜ் நிறுவன ஊழியர் சுகந்த் (23) ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.