செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் 'புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக மோகன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர்.
ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சுமார் 564 பேர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன், சுப்பிரமணியன், வெங்கட்ராமன் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், மோகன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.