ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் இருந்த எல்.இ.டி டிவிக்கள் ஆடியோ சிஸ்டம் உட்பட 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 31ம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுத்தும் இடத்தில் 3 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஊரடங்கை பயன்படுத்திய 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்தில் உள்ள 2 எல்.இ.டி டிவிக்கள், ஆடியோ சிஸ்டம், ஸ்பீக்கர் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடியுள்ளனர். இதைப்பார்த்த வாட்ச்மேன் அவர்களை வழிமறித்து சண்டையிட்டதில் ஒருவருடைய செல்போன் மட்டும் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.