குற்றம்

நடத்தையில் சந்தேகம்: மனைவிக்கு கட்டாய திருமணம் செய்த கணவன் - கைதான காட்டுமிராண்டி கும்பல்

நடத்தையில் சந்தேகம்: மனைவிக்கு கட்டாய திருமணம் செய்த கணவன் - கைதான காட்டுமிராண்டி கும்பல்

Veeramani

திரிபுராவில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கணவன் தலைமையிலான கும்பல் கொடூரமாக ஒரு பெண்ணை தாக்கியுள்ளது. அந்த கும்பல், அப்பெண்ணுக்கு  காதலன் என்று கூறப்படும் நபருடன் கட்டாயமாக திருமணமும் செய்து வைத்துள்ளது.

இந்த சம்பவம் திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் நடந்ததாக  போலீசார் தெரிவித்தனர். தெலியமுரா காவல் நிலையப் பகுதியில் உள்ள மத்திய கிருஷ்ணாபூரில் சனிக்கிழமை இரவு அந்தப் பெண் தாக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலியமுரா காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுபிமல் பர்மன் கூறினார்.



பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வாக்குமூலம் விசாரணை அதிகாரியால் மருத்துவமனையில் இருந்து பதிவு செய்யப்பட்டது. இதில், 'தனது கணவர் உட்பட 15 பேர் சேர்ந்து தன்னை நெல் வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார். அந்த கும்பல் அவளை இரக்கமின்றி தாக்கியதுடன், தனது காதலன் எனக் கூறப்படும் நபரை கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் அந்த பெண் கூறினார். தாக்கப்பட்டதால் சுயநினைவை இழந்ததாகவும் அவர் கூறினார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

10-15 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை இரக்கமின்றித் தாக்கத் தொடங்கியபோது, அவரது கணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார் என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



இதனிடையே, திருமணத்துக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மனைவியைத் தாக்கியதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.