செய்தியாளர்: சந்திரன்
கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் ஆங்கில காய்களை இறக்கிவிட்டு வசூல் செய்த பணம் ரூ.50 லட்சத்தை லாரி டிரைவர் சீட் அருகே உள்ள பெட்டிக்குள் வைத்துள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளனர், அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் லாரியில் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு டிரைவரை மிரட்டிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்,
தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் தலைமையில் 6 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நவலூர் குட்டப்பட்டு பகுதியில் மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜீயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்த இசக்கிமுத்து என்ற போஸ் (25), வெள்ளத்துரை என்ற வெள்ளை பாண்டி (22), உதயநிதி என்ற வட்டம் சூர்யா (27), ஆகியோர் ஒப்பாரி பாலத்தில் இருந்த குதித்துள்ளனர்.
இதில், மூன்று நபர்களுக்கும் காலில் முறிவு ஏற்பட்டது, இதையடுத்து மூன்று நபர்களும் திருச்சி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதைத் தொடர்ந்து திருநெல்வேலியைச் சேர்ந்த முத்து மணிகண்டன்(25), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், இவர்களிடம் இருந்து ரூ.26 லட்சம் பணம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்த ஐந்து நபர்களில் மூன்று பேர் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.