இடப் பிரச்னையில் கேபிள் டிவி உரிமையாளர் வெட்டிக் கொலை 6 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துரை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரது மகன் மாதவன் (41). இவர் பம்பரம்சுற்றி கிராமத்தில் கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில், மாதவனுக்கும். இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் மதி (53) என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மதி மாந்துரையில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு, கீரமங்கலம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து கீரமங்கலத்தில் இருந்த போது தனது பிரச்னை குறித்து ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ஸ்டீபன் ஆரோக்கியராஜ் கொடுத்த திட்டத்தின்படி கடந்த திங்கட்கிழமை அதிகாலை அப் பகுதியில் உள்ள கைலாஷ்நகரில் நடைப்பயிற்சிக்குச் சென்ற மாதவனை இருசக்கர வாகனத்தில் வந்த 6பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சீத்தாராமன் மற்றும் லால்குடி போலீசார், மதியை பிடித்து விசாரணை செய்தனர். இதில், இடப் பிரச்னையில் மாதவனை, நண்பர்கள் உதவியுடன் கொலை செய்து தப்பியோடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பா.மணிகண்டன் (24), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (26), நெய்குப்பை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (24), மேல சிந்தாமணி மணிகண்டன் (27), மண்ணச்சநல்லூர் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஆரோக்கியராஜ் (37) 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.