திருச்சி மாவட்டத்தில் 4 சவரன் தங்க நகைக்காக 65 வயது பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் சுல்லாமணி கரையை சேர்ந்தவர் 72 வயதான மலை கொழுந்தன். விவசாயியான இவருக்கு 65 வயதில் அக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சிறும்பாயி, அய்யினாள் என்ற மகள்களும் வைரமணி என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் உள்ளூரிலேயே மணமுடித்துக் கொடுத்துள்ளனர். மகனும் அதே உள்ளூரிலேயே வசித்துவருகிறார்.
கொழுந்தன் - அக்கம்மாள் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் வீட்டின் அருகே ஆடு மாடு வளர்த்து வருகிறார்கள். ஆடு மாடுகளுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று பசும்புல் அறுத்து வருவது அக்கம்மாளின் வழக்கம். அதே போன்று நேற்று மதியம் 3 மணிக்கு தன் வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டு பசும்புல் அறுக்க சென்றுள்ளார் அக்கம்மாள்.
ஆனால் வெகுநேரமாகியும் அக்கம்மாள் வீடு திரும்பவில்லை. உடனே அவருடைய கணவர் கொழுந்தன், மகன் மற்றும் மகள்கள் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து நேற்று மாலை தொடங்கி இரவு முழுக்க தேடியுள்ளனர். எங்கு தேடியும் அக்கம்மாள் கிடைக்காத நிலையில் இன்று காலை சுமார் ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணிவேல் என்பவரது சோலை காட்டுக்குள் அக்கம்மாள் ரத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்க்கையில் அக்கம்மாள் அணிந்திருந்த 4 பவுன் செயின் மற்றும் தாலி ஆகியவற்றை காணவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை மர்மநபர்கள் கழற்ற முடியாததால் மூக்கிலேயே பலமாக தாக்கிவிட்டு அதை கழட்ட முற்பட்டுள்ளனர். அப்படியும் கழற்ற முடியாததால் மூக்குத்தியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் தற்போது தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.