செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (57). கோயில் பூசாரியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.