சிறுவனை கொலை செய்த பெண் pt desk
குற்றம்

நெல்லை: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்த பெண் - போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே ஆத்தூர் குறிச்சியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் - ரம்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் இன்று காலை பள்ளிக்குச் சென்றுள்ளான். அச்சமயத்தில் மூன்று வயதுடைய இரண்டாவது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, அச்சிறுவனை அங்கன்வாடியில் விடுவதற்காக தாய் ரம்யா தேடியுள்ளார். அப்போது குழந்தை அங்கு இல்லாத நிலையில், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தேடியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிறுவன்

எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து தந்தை விக்னேஷ் இராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், குடும்பத்தினருடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷின், எதிர் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அந்த வீட்டில் வசித்து வந்த தங்கம்மாளுக்கும் இந்த தம்பதியினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கமாள் வீட்டில் குழந்தையை தேடாமல் இருந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் போலீசார், தங்கம்மாள் வீட்டினுள் சென்றுள்ளனர்.

அப்போது தங்கம்மாள் ஒரு சாக்கை வெளியே எடுத்து வைத்து விட்டு போலீசாரிடம் இருந்து தப்பியோடி கிராமத்திற்குள் ஒளிந்து கொண்டார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார், அந்த சாக்கை பிரித்துப் பார்த்தபோது அதில், சிறுவன் சஞ்சய் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தரையில் விழுந்து அழுது புரண்டனர். இந்த நிலையில், ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த தங்கம்மாள் “தெரியாமல் செய்துவிட்டேன்” என்று கை கூப்பியவாறு போலீசாரை நோக்கி வந்தார்.

Police station

அப்போது கிராம மக்கள் அவரை அடிக்க முற்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்கம்மாளை மீட்ட போலீசார், ராதாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கம்மாளுக்கும், விக்னேஷ் - ரம்யா ஆகியோருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாகவும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராதாபுரம் போலீசார் தங்கம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அப்பெண் இச்சிறுவனை வாஷிங் மெஷனில் போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் சோதனை நடைபெற்று வருகிறது.