சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் பிரதான சாலையில் சாலையோரம் கேட்பாரற்று டிராலி சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அருகில் கட்டட வேலை செய்ய சென்ற நபர்கள், அந்த சூட்கேஸை பார்த்து சந்தேகப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிகழ்விடம் சென்ற போலீசார், அதில் இளம்பெண் ஒருவரின் உடல் துண்டிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தனர். தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்த நிலையில் தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையார் துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வேறு எங்கேனும் வைத்து கொலை செய்துவிட்டு இங்கே சூட்கேசில் போட்டு வீசிச் சென்றனரா என்பது குறித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரித்ததில் இறந்த பெண் இரு தினங்களுக்கு முன் காணாமல் போன மாதவரத்தை சேர்ந்த தீபா என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்ததாக கருதப்பட்ட நபர், அப்பகுதியில் தனது அண்ணன் வீட்டில் தங்கி இருப்பதாகவும், அண்ணன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இப்பெண்ணை அங்கு கூட்டிச்சென்று அந்த வீட்டில் கொலை செய்து சூட்கேசில் வைத்து தூக்கி எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏன் கொலை செய்தார், என்ன நடந்தது என்பதெல்லாம் அடுத்தடுத்த விசாரணையிலேயே தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.